நடிகர் சூர்யா குடும்பத்தினர் வருகை.. கீழடியில் கால்கடுக்க வெயிலில் காக்கவைக்கப்பட்ட மக்கள்!

இன்று தமிழரின் பெருமை பேசும் பல விஷயங்களை ஒருங்கே அமையகொண்டது தான் சிவகங்கை மாவட்டத்தில் அமையப்பட்டுள்ள கீழடி என்ற இடத்தில் உள்ள ஒரு முக்கிய அருங்காட்சியம். இந்த அருங்காட்சியகம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இந்த இடம் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய புராதானமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள் இங்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் சூர்யா, தனது குடும்பத்தினருடன் கீழடியை பார்வையிட சென்று இருந்தார். அப்பொழுது அவருடன், மனைவி ஜோதிகா, மகள், மகன் மற்றும் தந்தை சிவகுமார் அவருடைய மனைவி ஆகியோரும் உடன் இருந்தனர்.
இவர்கள் கீழடி அருங்காட்சியத்திற்குள் சென்ற நேரத்தில் அங்கு வந்திருந்த பிற பார்வையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வாசலிலேயே காக்க வைக்கப்பட்டுள்ளனர். சூர்யா குடும்பத்தினர் சுமார் ஒரு மணி நேரம் கீழடியை சுற்றி பார்க்கும் வரையிலும் கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெயிலின் உக்கிரம் தாங்காமல் இறுதியில் பார்வையாளர்கள் அருகில் இருந்த ஒரு மரத்தடியில் தஞ்சம் அடைந்தார். சூர்யாவின் குடும்பம் அங்கிருந்து புறப்பட்ட பிறகு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.