Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

அருள்மிகு திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயில்

thirupathi perumal kovil

ஆன்மிகம்

அருள்மிகு திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயில்

ஊர் -மேல் திருப்பதி

மாவட்டம் -சித்தூர்

மாநிலம் -ஆந்திர பிரதேசம்

மூலவர் -வெங்கடாஜலபதி

தீர்த்தம் -சுவாமி புஷ்கரிணி

திருவிழா -பெருமாளுக்கு உண்டான அனைத்துவித விழாக்களும் இங்கு சிறப்பாக செய்யப்படுகிறது. இதில் புரட்டாசி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

thirupathi perumal kovil

தல வரலாறு:

பெருமாள் கிருஷ்ணா அவதாரத்தை முடித்து வைகுண்டத்தில் தங்கியிருந்த வேளையில், பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. எனவே காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள், இறைவன் பூமியில் அவதாரம் செய்ய யாகம் தொடங்கினர். அப்போது, யாகத்தின் பலனை யாருக்கு தரப் போகிறீர்கள்? என்று நாரதர், முனிவர்களிடம் கேட்டார். யாகத்தின் பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர்.

மூர்த்திகளில் யார் சாந்தமானவர் என தேடி பிருகு வைகுண்டம் சென்றார். அப்போது திருமால் பிருகு முனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே பிருகு அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். எனவே பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாக பலனை தருவதென முனிவர்கள் முடிவுசெய்தனர்.

அப்போது கோபம் கொண்ட லட்சுமி பிருகு முனிவரை தண்டிக்கும்படி திருமாலிடம் எடுத்துரைத்தார், திருமால் அதை மறுக்கவே பாற்கடலில் இருந்து கிளம்பி பூலோகத்தில் வந்து தவம் இருந்தார். திருமாலும் லட்சுமியை தேடி பூலோகத்தை சுற்றியலைந்து வேங்கட மலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார்.

அவ்வேளையில் திருமாலின் பசியறிந்து ஒரு பசு அந்த புற்றினுள் தானாக பால் சொரிந்தது. இதை கண்ட இடையன் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் விழுந்து ரத்தம் சிந்தியது, தன் காயம் தீர மூலிகை தேடி சென்ற பெருமாள் அங்கிருந்த வராக மூர்த்தியின் ஆசிரமத்தைக் கண்டார்.

அங்கு வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தை கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் தேவியை அம்மா என்று அழைத்தார். வகுளாதேவி திருமாலுக்கு சீனிவாசன் எனப் பெயரிட்டாள். பின் திருமாலின் காயத்திற்கு மருந்திட்டு, பசி போக்கிட கனிகளைத் தந்தாள்.

அப்போது சந்திரகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டுவந்தான். பிள்ளை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். பின் பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில் படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு பத்மாவதி என்ற பெயர் சூட்டினார்.

ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம் பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாக ஆகாசராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள். பின் சீனிவாசப் பெருமாளுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. பிறகு சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலா ரூபமாக பக்தர்களுக்கு அருள் புரியும் விதமாக திருமலையில் எழுந்தருளினார்.

பத்மாவதி அலமேலுமங்காபுரம் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்து தங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் உள்ளது.

சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் எழுப்பியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவில் 3:00 மணிக்கு திறக்கப்படும். 3:30 மணி வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும் காலையில் ஆறு பேர் கொண்ட அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 6 பேர் சன்னதிக்கு முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்து, பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை கொடுத்து திறப்பார்.

சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் “கௌசல்யா சுப்ரஜா ராமா” என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும் சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை ஏற்றி பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள்.

அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள் சுப்ரபாதம் பாடி முடிந்த சன்னதி திறக்கப்படும் சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து நிவேதனம் ஆரத்தி பெறப்படும் தீபாராதனை செய்யப்படும் விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.

திருப்பதி மலையில் உள்ள ஆகாய கங்கை தீர்த்தத்தில் இருந்து மூன்று குடங்கள் புனிதநீர் வந்து சேரும், ஒரு குட நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், மீதம் ஒன்றை இரவு பூஜைக்கும் உபயோகிக்கிறார்கள். ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள், பின்னர் உத்தரணியில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார் சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வதாக ஐதீகம்.

பின்னர் மீதமுள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்கிறார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக சீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு வஸ்திரம் சாத்த பட்டு சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டி குடைபிடித்து சாமரத்தால் விசுறுவார்கள். இதன் பிறகு தீபாராதனை நடக்கும். இத்துடன் காலை சுப்ரபாத நிறைவடைகிறது.

காலை 3: 45 மணிக்கு தோமாலை சேவை ஆரம்பமாகும். சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும் பூமாலை சேவை காலை நான்கு முப்பது மணிக்கு நிறைவுபெறும். இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடைபெறும் கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது.

இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியே எடுத்து ஒரு மறைவிடத்தில் வைத்து எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய், நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுகின்றார்கள். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி, உள்ளிட்ட விவரங்களை படித்து அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் கணக்கு சொல்லப்படுகிறது. மூலவரே கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம். மூலவர் இடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பப்படுகிறது. இந்த காட்சியை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. இங்கு வெங்கடாஜலபதிக்கு என தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்யப்படுகிறது. சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து அர்ச்சனாந்திர தரிசனம் என்ற பூஜை நடைபெறுகிறது.

வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் பட்டு அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு “சாலிம்பு” என்று பெயர். மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.

இங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. திருமண தடை உள்ள ஆண் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்கள். மாலை நாலு மணிக்கு கோவிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை டோலாத் ஸவம் என்பர்.

திருப்பதி லட்டை ஒரு காலத்தில் மனோகரம் என்ற பெயரில் அழைத்தார்கள். திருப்பதியில் 1:30 மணி வரை நடை திறக்கப்பட்டு சர்வ தரிசனம் நடக்கும் ஒன்னு முப்பது மணிக்கு மேல் சுவாமி தூங்கச் செய்வதற்காக, ஏகாந்த தரிசனம் என்னும் நிகழ்ச்சி நடத்துவார்கள். திருமலையின் சிகரத்தில் திருமால் பாதம் பதித்து நின்ற இடம் நாராயணகிரி என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீவாரி பாதம் என்றும் அழைக்கின்றனர் ஒரு அழகான மண்டபத்தின் நடுவில் பாத தரிசனத்தை இப்போதும் காணலாம். மலையுச்சியிலிருந்து கீழுள்ள கோயிலையும் ரசிக்கலாம் ஜீப்பில் சென்றால் சிலாதோரணம், ஸ்ரீவாரி பாதங்களின் ஒரே நேரத்தில் தரிசித்து விடலாம். இவ்விரண்டு பகுதிகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளன ஸ்ரீபாத மண்டபத்தில் ஆண்டாள் சன்னதி ஒன்று உள்ளது.

ஸ்ரீபாத மண்டபத்தை அடுத்து உள்ள பகுதி தலையேழு கொண்டு பார்வை இப்பாறையில் ஆஞ்சநேயரின் திருவுருவத்தை பார்க்கலாம். இவரிடம் தலை பதித்து வழங்கினால் திருமலை யாத்திரை சென்று சேரும் வரையில் உடல் உபாதைகள் எதுவும் இன்றி சென்று வரலாம் என்று நம்புகிறார்கள். இதுபோன்று தலையேழு குண்டு ஆஞ்சநேயர் உருவங்கள் மலைப்பாதையில் 3 இடங்களில் அமைந்துள்ளன.

மலைப்பாதை வழியில் வழி நெடுகிலும் தசாவதார மண்டபங்கள் உள்ளன. இதில் ஒன்பது அவதார மண்டபங்களைக் கடந்ததும் கல்கி அவதாரம் மண்டபம் வரும் என எதிர்பார்த்தால் ஹயக்ரீவர் மண்டபம் வருகிறது. கல்கி அவதாரம் இனிமேல் நிகழப்போகிறது என்பதால் இந்த மாற்று ஏற்பாடு.

ஹயக்ரீவர் கல்விக்குரிய தெய்வம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் பன்னிரண்டு ஆழ்வார்களின் மண்டபங்கள் அமைந்துள்ளன இந்த தசாவதார மண்டபங்களையும் ஆழ்வார் மண்டபங்களையும் முழுமையாகக் கடந்து முடிக்கும் போது நாம் திருமலையின் உச்சியில் இருப்போம்.

மலைப்பாதையில் மொத்தம் மூன்று கோபுரங்கள் அமைந்துள்ளன. அலிபிரியில் முதல் கோபுரம் அமைந்துள்ளது. 2100 படிகள் கடந்தவுடன் குருவ மண்டபத்தை அடுத்து காளி கோபுரம் உள்ளது. 17ஆம் நூற்றாண்டில் மட்லகுமார அனந்தராயன் என்னும் மன்னன் இந்த மலைப்பாதை கோபுரங்களை கட்டியவர்.

காளி கோபுரத்தை அடுத்து சற்று தொலைவில் நரசிம்ம கோவிலை தரிசனம் செய்யலாம். நரசிம்மர் கோயில் அமைந்துள்ள இடம் தபோவனம் என்று அழைக்கப்படுகிறது. வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் வராக சுவாமி கோயில் அமைந்துள்ளது புராணங்களின்படி இதுவே ஆதி வராக சேத்திரம் என்று சொல்லப்படுகிறது.

பெருமாள் சீனிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கியதாக புராணத்தில் சொல்லப்படுகிறது. வெங்கடாஜலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது விதி. இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளம் கரையில் உள்ளது.

பத்ரன் என்ற அந்தணன் தன் மனைவியருடன் வறுமையில் வாழ்ந்து வந்தான். அந்தனன் மனைவியருள் ஒருத்தி தன் தந்தையின் ஆலோசனைப்படி, பத்ரனை பாபவிநாச தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டு வர சொன்னாள். அவ்விதமே நீராடி தன் வறுமை நீங்கப் பெற்றான். தீர்த்தக்கரையில் பவானி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இழந்த சொத்தை மீண்டும் பெற இத்தீர்த்தத்தில் நீராடி பவானி கங்கை அம்மனை வழிபாடு செய்யவேண்டும் என்பது ஐதீகம்.

பாபவிநாச தீர்த்தம், ஆகாய கங்கை தீர்த்தம், வேணுகோபாலசுவாமி கோயில், பாபாஜி சொக்கட்டான் விளையாடிய இடம் மூன்று இடங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. திருப்பதி வெங்கடாசலபதி என்றால் பலருக்கும் அவர் பணக்கார கடவுள் என்று தான் தெரியும். ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி கடன்காரர். அவரது வரலாற்றுப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மறுபிறவி கிடையாது என்பர்.

திருமலையின் அதிசயத்தின் அடிப்படையில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கிறது. அன்று சுவாமி பவனி வரும் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பார்கள் ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே ஆடு மேய்க்கும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம். திருப்பதி கோயில் விமானத்தின் கிழக்கு பகுதியில் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளது. சங்கு, சக்கரத்துடன் அபயஹஸ்த நிலையில் இவர் காட்சி அளிக்கிறார். இவரை வணங்கினால் மிகப்பெரும் அளவு செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்துக் கட்டடக் கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் பதிமூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. படி காவலி மஹாதுவாரம் என்று இந்த கோபுரத்தை அழைக்கின்றனர்.

கோவிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்தை சம்பங்கி பிரதட் சினம் என்று அழைக்கின்றனர். இந்த பிரகாரத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. இங்கு பிரதமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஐனா மகால் த்வஜ ஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top