ஜூன் மாத ராசி பலன்கள் 2022 – இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்..!
ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சந்திரன், மீன ராசியில் குரு, செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
மேஷம்
மேஷ ராசி அதிபதியான செவ்வாய் பகவான், இந்த மாத தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12ம் வீடான விரய, மோட்ச ஸ்தானத்தில் குரு பகவானுடன் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பது மேலும் விசேஷமானது. இதனால் வேலை, கல்வி தொடர்பாக வெளியூர், வெளிநாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. ராகுவுடன் சுக்கிரன் இருப்பதால் துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.
ரிஷபம்
ரிஷப ராசி அதிபதி, ராசிக்கு 12ம் இடத்தில் சஞ்சரிக்கக்கூடிய காலம். 5ம் வீட்டு அதிபதி புதன் சஞ்சரிப்பது சாதக பலனைத் தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே பணம் கொடுத்தல் வாங்குதலை தவிர்க்கவும். விரய செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது. குடும்ப தேவைகள் அதிகரிக்கும். சகோதரர் வகையில் நன்மை உண்டாகும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் உகந்த மாதமாக இருக்கும்.
கடகம்
தொழில் ஸ்தான அதிபதியான செவ்வாய், ராசிக்கு 10ம் இடத்திற்கு 12ம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பூர்விக பலன்கள், சொத்துக்கள் வாங்க, விற்க, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை ஏற்படும். ராசிக்கு 2ம் வீட்டு அதிபதி சூரியன், ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருப்பதால் உங்களின் சொந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். மாத தொடக்கத்தில் ராசி அதிபதி 12ம் வீட்டில் சஞ்சரிப்பதால் சில அலைச்சல்கள், தொந்தரவுகள் இருக்கும். வண்டி, வாகன செலவுகள் ஏற்படக்கூடும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பூர்விக சொத்து கிடைக்கும். நிலம் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
சிம்மம்
ராசி அதிபதி சூரியன் கடந்த மாதம் ராகுவுடன் சேர்ந்து சஞ்சரித்து வந்தார். 3ம் இட அதிபதி சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்திருப்பதால், உறவினர்கள், பெண்களிடம் பிரச்சனை ஏற்படலாம். வேலை தொடர்பான சில மன வருத்தங்கள் நீங்கும். சூரியன் 10ம் இடத்திலிருந்து 11ம் இடத்திற்கு இந்த மாதம் வருவார்.அதன் மூலம் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
கன்னி
ராசி அதிபதி புதன் 9ம் வீட்டில் சூரியனுடன் அமர்ந்திருப்பதால் சில பிரச்னைகள் ஏற்படும். வியாபாரம், தொழில் ரீதியாக சில சவால்களைச் சந்திப்பீர்கள். வேலைத் தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 6ல் சனி இருப்பதால் மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி படிக்கவேண்டும். மாத இறுதியில் உங்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாக வாய்ப்புள்ளது.
துலாம்
எதிரிகள் மூலமாக உங்களுக்கு சில விரயங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. நீங்கள் செய்யக்கூடிய வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். துலாம் ராசியில் கேது பகவானும், துலாம் ராசி அதிபதி சுக்கிரன் ராகு உடனும் சேர்ந்திருக்கின்றனர். எனவே எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
ராசி அதிபதியான செவ்வாய், 5ம் இடத்தில் குரு உடன் சேர்ந்துள்ளார். 7ம் வீட்டு அதிபதியான சுக்கிரன், எதிரி ஸ்தானமான 6ல் இருக்கிறார். இதனால் குடும்பஸ்தர்கள் கண்டிப்பாக பேச்சில் கவனமுடன் இருப்பது அவசியம். வேலை, வியாபாரம், தொழில் என எது செய்தாலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர் மூலம் நல்ல அறிவுரை கிடைக்கும்.
தனுசு
இந்த மாதம் நீங்கள் முன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். இல்லற இன்பம் கிடைக்கும். அதிக தூக்கம், சோம்பேறித்தனத்தை மாற்றிக் கொள்வது அவசியம். சுக்கிரன் 5ல் ராகுவுடன் இருப்பதால் உங்களின் ஆசை, விருப்பங்களை அடுத்தவர்கள் மீது திணிக்க வேண்டாம்.
மகரம்
இந்த மாதம் உங்களின் கவலை தீரும். எந்த ஒரு வேலையும் சிறப்பாக முடிப்பீர்கள். 4ல் ராகுவுடன், சுக்கிரன் இணைந்திருப்பதால், உங்களின் வியாபாரம், தொழில் தொடர்பான முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரனுக்கு உகந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்துவிட்டு வருவது நல்லது.
கும்பம்
கும்ப ராசி அதிபதி சனி பகவான், ராசியிலேயே சஞ்சரிக்கிறார். உங்களின் குடும்பத்தில் சில சஞ்சலங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். ராகுவுடன் சுக்கிரன் இருப்பதால் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். பணியிடத்தில் பதவி உயர்வு போன்ற விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
மீனம்
ராசி அதிபதி குரு பகவான், ராசியிலேயே இருப்பதும், அவருடன் 2ம் வீட்டு அதிபதி செவ்வாயும் சேர்ந்திருப்பது விசேஷமானது. உங்கள் குடும்பத்தில் சில மன வருத்தம், சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் கண்டிப்பாக நிதானம் தேவை. வீண் பேச்சால் பிரச்சனைகள் ஏற்படும். சனி பகவான் 12ம் இடத்தில் இருந்து ராசிக்கு 6ம் இடத்தை பார்வையிடுகிறார். எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.